top of page

எனது இசைப்பயணம் - பவனிதா தர்மரத்தினம் (My Journey in Music - Bavanitha Tharmaratnam)

Summary in English follows...


மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்கள் நால்வரும் எங்கள் வாழ்வில் மேன்மையானவர்கள். நாம் பிறந்தவுடன் மாதாவை பார்க்கிறோம், அதன் பின்னர் பிதாவை பார்க்கிறோம். பூர்வஜென்ம புண்ணியம் இருக்கும் சிலர், ஓர் உண்மையான குருவை பார்க்கிறார்கள். ஓர் உண்மையான குருவின் மூலம் ஒருவரின் வாழ்வில் உள்ள இருள் நீங்கி அவரது வாழ்வு ஒளிமயமாகிறது. இறைவனின் திருவருளால் என் வாழ்வில் நல்ல தாய், தந்தை மற்றும் சிறந்த குரு இவர்கள் மூவரையும் நான் பெற்றுள்ளேன்.


எனது பெயர் பவனிதா தர்மரத்தினம். நான் நோர்வேயில் பிறந்து அங்கேயே வசித்து வருகிறேன். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில்நுட்பம் மற்றும் இரசாயனப்பிரிவில் இளநிலை பொறியியல் பட்டம் (Bachelor of Biotechnology and Chemical Engineering) பெற்றுள்ளேன். இப்பொழுது ஒரு ஆண்டு காலமாக குருகுலவாசம் சென்று வீணை பயின்றுவருகிறேன்.


எனது 4 வயது முதல் திருமதி.சிவமலர் மனோகரனிடம் வாய்ப்பாட்டு கற்க ஆரம்பித்தேன். 8 வயதில் திருமதி.வாசுகி ரங்கனிடம் வீணை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன், 11 ஆண்டுகள் வீணை கற்றேன். நான் OFAAL, OEBL, NORKALAI போன்ற சங்கீதப் பரீட்சைகளில் தேர்வு பெற்றுள்ளேன்.. எனக்கு 16 வயதில் வாய்ப்பாட்டில் அரங்கேற்றம் நடைபெற்றது. அதன் பின்னர் முத்தமிழ் அறிவாலயம் என்னும் தமிழ் பாடசாலையில் சங்கீத ஆசிரியராக பணியாற்றினேன். அதுமட்டுமின்றி பாட்டுப்போட்டிகளிலும், கலைநிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியிருக்கிறேன்.


இவை அனைத்தையும் நினைத்துப் பார்க்கும் பொழுது ஏதோ பெரிதாக சாதனை செய்தது போல் உணர்ந்தேன். ஆனால் இவை அனைத்தும் ஒரு பிரமையே என்பதை 2016ஆம் ஆண்டு, திரு.சுந்தரமூர்த்தி கணேசன் (Kutty Master) அவர்கள் உருவாக்கிய, திரு.காரைக்குடி சுப்பிரமணியன் அவர்கள் நடத்திய இசைப்பட்டறையில் கலந்து கொண்ட போதுதான் உணர்ந்தேன், அறிந்தேன். பின்னர் அவர்கள் உண்டாக்கிய கல்வி முறையில் கற்கத்தொடங்கினேன்.


நோர்வேயில் இசை கற்பவர்கள் ஏன் இந்தியாவில் கற்பவர்கள் தரத்திற்கு இல்லை? இந்தியாவில் உள்ள இசையின் தரத்திற்கு நோர்வே கலைஞர்களால் வரமுடியாதா? இதே போல் பல விடை தெரியா கேள்விகள் என் மனதில் தோன்றிய வண்ணம் இருந்தது. என்னுடைய விடை காண முடியா அனைத்து கேள்விகளுக்குமான பதிலாக, என் குருவாக, திரு காரைக்குடி சுப்பிரமணியன் என் முன்னால் நின்றார். என் குருவின் இசை ஞானத்தால் ஈர்க்கப்பட்டு, என்னை சமர்ப்பணம் செய்து, எனது கேள்விகளுக்கு விடையை குருவிடம் இருந்து பெறுவதற்கு ஆயுத்தமானேன்.


திரு.காரைக்குடி சுப்ரமணியன் அவர்கள் 9வது தலைமுறையை சேர்ந்த வீணை வித்துவான் ஆவர். சுப்பிரமணியன் அவர்களின் தாத்தாவான சாம்பசிவ ஐயர் அவர்களால் அவரது 13 ஆம் வயதில் தத்தெடுக்கப்பட்டு அவருடைய இசைவாரிசாக உருவானார். இவர் அமெரிக்காவில் உள்ள வெஸ்லெயன் யூனிவெர்சிட்டியில் (Wesleyan University) உலக இசைப்பற்றி நான்கு வருடங்கள் படித்தார். ‘இந்திய இசைப்பாரம்பரியங்களில் வீணையும் அதில் தனக்கென்று பாணியும்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் (Ph.D) பட்டம் பெற்றார். பின்பு தனது ஆராய்ச்சி மூலம் காமத் (COMET) “ஒன்றை ஒன்று இணைக்கும் நடு நிலைப்பட்ட இசைக்கல்வி மற்றும் பயிற்சி முறை” யை உருவாக்கினார். அதன் விளைவாக ‘பிருஹத்வனி’ (Brhaddhvani), (பெரிய ஒலி) என்ற உலக இசை ஆராய்ச்சி மையத்தை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உருவாக்கினார். பிருஹத்வனி இந்தியாவில் மட்டும் அல்ல அமெரிக்கா, லண்டன், டென்மார்க், நோர்வே போன்ற பல உலக நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.


பிருஹத்வனியில் எனது அடிப்படை கல்வியை குருவின் சிஷ்யையான திருமதி. குமுதா பாலாஜி அவர்களிடம் கற்றுக்கொண்டேன். அதன் பின் என் குருவிடம் மேல்கல்வி கற்றுவருகிறேன். கல்வி முறையான காமத் (COMET). கடினமான உருப்படிகளை சுலபமாக கற்றுக்கொடுக்கிறது. அது மட்டுமில்லாமல் Patantara என்ற இணையதளம் மூலம் ஒருவர் சுயமாக பல பாடல்கள்/உருப்படிகள் கற்றுக்கொள்ள முடியும். COMET மற்றும் Patantara மூலம் எந்த உலக இசையையும் சுலபமாக கற்றுக்கொள்ள முடியும். இம் முறைகள் மூலம் சங்கீதம் மட்டும் இல்லாமல் தமிழ், தமிழ் உச்சரிப்பு, மொழிகளின் ஒலி இவை போன்ற பல்வேறு விடயங்களை கற்றுக்கொள்ள முடியும்.


எப்பொழுதும் எமக்கு பிடித்த ஒரு விஷயத்தை சரியாகவும், முறையாகவும், ஆழமாகவும் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாமும் நம் தலைமுறையும் மட்டுமல்லாது எதிர்கால தலைமுறையும் பாதிக்கப்படும்.


‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’


This is Bavanitha Tharmaratnam of Norway. I started singing from the age of 4 (2001), learning veena from 8. I spent 15 years in learning music in Oslo when I happened to attend a workshop by Dr. Karaikudi Subramanian in 2016. I never knew that would be a new beginning in my musical life! I decided to surrender to music completely. Dr. Karaikudi Subramanian became my Guru. Thirumathi Kumudha Balaji, his disciple, started teaching me the basics in the Karaikudi style on line from then. From 2019 when I attended a workshop by my guru in Salt Lake City, Utah, I began learning straight from him. I now know the frustrations in learning to unlearn and re-learn. For the benefit of students like me, here is a video titled THEN & NOW! Time is Gold. Spend it wisely!Comments


bottom of page